சென்னை: தமிழ் சினிமாவின் தனது ஸ்டைலிஷான மேக்கிங் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம், பாலிவுட்டில் ஷெர்ஷா (Shershah) என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கிய பாலிவுட் திரைப்படத்தை தவிர்த்து, அனைத்து படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று யுவன் சங்கர் ராஜா தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், யுவனுடன் பணியாற்றியது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவரிடம், தமிழ் படம் இயக்குவதற்கு ஏன் இவ்வளவு இடைவேளை என கேட்டதற்கு, "கரானோ காலகட்டத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் 'ஷெர்ஷா' என்ற இந்தி படத்தை இயக்கிக் கொண்டு இருந்தேன். மேலும் ஷெர்ஷா தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது. தற்போது மீண்டும் 'நேசிப்பாயா' திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளேன். சர்வம், அறிந்தும் அறியாமலும், பட்டியல் என வெவ்வேறு ஜானர் படங்களை இயக்கியுள்ளேன். ஆக்ஷன் படம் தான் பண்ண வேண்டும் என்று நினைக்கவில்லை. ஷெர்ஷா போர் தொடர்பான திரைப்படம். இனி நான் இயக்கும் படங்களுக்கும், முந்தைய படங்களுக்கும் சம்பந்தமே இருக்காது” என்றார்.
யுவனுடன் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து பழகியது குறித்து பேசுகையில், “யுவன் எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே பழக்கம். அவர் எனக்கு முன்பே இசையமைப்பாளர் ஆகிவிட்டார்” என்றார். மற்ற இயக்குநர்களின் படங்களில் உங்களுக்கு பிடித்த யுவன் பாடல்கள் குறித்து கேட்ட போது, “வெங்கட் பிரபு படங்களில் யுவன் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ராம் பட பாடல்களும் மிகவும் பிடிக்கும். இது தவிர்த்து யுவன் இசையமைக்கும் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும்” என்றார்.
யுவன் இப்போதும் நன்றாக இசையமைத்து வருகிறார் - இயக்குநர் விஷ்ணுவர்தன்#DirectorVinshuVardhan #YuvanshankarRaja #MusicDirector #Music #ETVBharatTamil
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) August 31, 2024
@thisisysr pic.twitter.com/Sw4LymdjAD
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்டதற்கு, "எனது நண்பர் என்பதால் யுவன் பின்னணி இசை உடனே கொடுத்துவிட மாட்டார். நாம் ஒரு பாடலுக்கான சூழலை உருவாக்கும் போது, அதனை யுவன் எவ்வாறு புரிந்து கொண்டு இசையமைக்கிறார் என்பது முக்கியம். யுவன் முதலில் படம் முழுவதும் பார்த்துவிடுவார்.
அதன் பிறகு ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஏற்றவாறு கேட்டு பெற்றுக்கொள்வேன். பில்லா தீம் மியூசிக் அப்படத்தில் ஒரு பாடலில் இருக்கும், அது எனக்கு ரொம்ப பிடித்தது. யுவன் அப்பாடலுக்கு வேறு வெர்ஷன் தயார் செய்து கொண்டு இருந்தார். அந்த பின்னணி இசை இந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கவில்லை" என கூறினார்.
நீங்கள் யுவனிடம் ஒரு விஷயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என கேட்டதற்கு, "அவரிடம் ப்ளஸ், மைனஸ் இரண்டுமே ஒன்றுதான். எப்போதும் கூலாக இருப்பார். பயங்கர ப்ளஸ் அவர் கூலாக இருப்பது. மிகவும் அழுத்தமான சூழலில் அவர் கூலாக இருப்பதால் நமக்கு மன அழுத்தம் அதிகரித்துவிடும். மேலும், கோட் பாடல் கேட்டேன் நன்றாக இருந்தது" என்றார்.
யுவன் ஷங்கர் ராஜா கம்பேக் என சமூக வலைத்தளங்களில் வைரலாவது பற்றிய கேள்விக்கு, "என்னைப் பொறுத்தவரை கம்பேக் என்ற கான்செப்ட் எதுவும் கிடையாது. யுவன் இப்போதும், எப்போதும் நன்றாக இசையமைத்து வருகிறார். கதைக்கு தகுந்த இசையை தான் கொடுக்க முடியும். அனைத்து படங்களுக்கும் அறிந்தும் அறியாமலும் 'தீப்பிடிக்க' பாடல் போல இசையமைக்க முடியாது.
கம்பேக் என்பதை நான் கண்டுகொள்வதில்லை. ரசிகர்களின் மனதை நாம் கணிக்க முடியாது. அவர்களின் விருப்பம் மாறிக் கொண்டே இருக்கும். அதற்கு தகுந்த மாதிரி நாம் படம் கொடுக்க வேண்டும்" என்றார். இதனைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை ஈடிவி பாரத் வாயிலாக தெரிவித்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/31-08-2024/22342032_watsap.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மீண்டும் கம்பேக் எப்போது? யுவன் சங்கர் ராஜாவின் அறிந்திராத பக்கம்! - Yuvan shankar raja Birthday