சென்னை: இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் லிங்கேஷ், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாற்கரப்போர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை நமீதா, கோமல் சர்மா, இயக்குநர் லெனின் பாரதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய லெனின் பாரதி, "நாற்கரப்போர் படத்தின் ட்ரெய்லரில் இரண்டு விஷயம் உள்ளது. ஒன்று தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை நிலை. பின்னர், சமூகத்தில் இரண்டு பிரிவினருக்கும் இடையே தொடர்ச்சியாக நடக்கின்ற இடைவிடாத போர்.
விளையாட்டு மற்றும் அதில் உள்ள அரசியல் பற்றி சமீபத்திய ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் தான் பேசுகின்றன. தொடர்ந்து பேச வேண்டிய தளமாக இது இருக்கிறது. அந்த தளத்தை தனது முதல் படமாக எடுத்துள்ள ஸ்ரீவெற்றிக்கு வாழ்த்துக்கள். விளையாட்டை பொதுவாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று உடல் உழைப்பு சார்ந்தது. மற்றொன்று மூளை சார்ந்தது.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மூளை இருக்காது என்று இங்கு ஒரு பொய்யான கட்டமைப்பு உள்ளது. சில சோம்பேறிகள் மற்றும் உழைப்பைச் சுரண்டி சாப்பிடும் கூட்டம் அதனை நம்ப வைத்துள்ளது. சமீபகாலமாக கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் தமிழ் வர்ணனை செய்வதில் கூட குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே உள்ளது.
அந்த தமிழ் வர்ணனையை கேட்கும்போது எரிச்சலாக உள்ளது. ஒரு மேல்தட்டு கூட்டம் வர்ணனை அரங்கில் இருந்துகொண்டு தன்னுடைய சாதி வக்கிரத்தையும், சாதி ஆதிக்கத்தையும் செலுத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த படம் வாழ்வியல் சார்ந்த படமாக உள்ளது. பல கோடிகள் போட்டு எடுக்கப்பட்ட படங்கள் என்ன ஆனது என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தை ஊடகத்தினர் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்" என்று பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தனுஷ், விஷாலுக்கு கிடுக்குப்பிடி.. நடிகர் சங்கத்துடன் பேச திட்டமா? தயாரிப்பாளர் திருமலை பிரத்யேக தகவல்! - Dhanush vs producers council