தூத்துக்குடி: பிரபல நடிகர் விஷால் நடிப்பில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி உள்ள ரத்னம் படம், ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ஹரி மற்றும் விஷால், மூன்றாவது முறையாக ரத்னம் படத்திற்காக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி வெளியான நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்குநர் ஹரி முன்னிலையில், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் மீண்டும் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பின்னர் இயக்குநர் ஹரி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “மிகவும் சந்தோஷமாக உள்ளது. ரத்னம் என்னுடைய 17வது படம். நடிகர் விஷால் வைத்து 3வது படம் இயக்கியுள்ளேன். இப்படம் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. மக்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம், அதுமட்டுமல்ல படம் முழுவதும் என்டர்டைமென்ட் படம் தான். முகம் சுழிக்கின்ற மாதிரி எதுவும் இருக்காது. நல்ல ஆக்ஷன் படமாக இருக்கும்” என்றார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “இப்படம் வட தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆந்திரா மாநிலம் சித்துர் பகுதியைச் சார்ந்த கதையாகும். இந்த படத்தில் 5 நிமிடத்திற்கு சண்டைக் காட்சிகளை ஒரே ஷாட்டாக எடுத்துள்ளோம்.
என்னுடைய அடுத்த படம் போலீஸ் சம்பந்தப்பட்ட படமாகத்தான் இருக்கும். 20 வருடத்திற்கு முன்னர் வந்த கில்லி படம் தற்போது தியேட்டர் முழுவதும் மக்கள் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்ல படங்கள் கொடுத்தோம் என்றால், நிச்சயமாக வெற்றி அடைய முடியும்” என்றார்.
நடிகர் விஷாலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர், “மார்க் ஆண்டனியில் நடித்த விஷாலுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனால், இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நிச்சயமாக மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.