சென்னை: ஆதம் பாவா தயாரித்து இயக்கி, இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இந்த படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இவ்விழாவில் இயக்குநர் அமீர், கரு. பழனியப்பன், படத்தின் கதாநாயகி சாந்தினி, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஆதம் பாவா, இயக்குநர் பொன்வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, இப்படத்தின் கதாநாயகன் அமீர் பேசுகையில், "நான் சந்தித்துள்ள புதிய மேடை இது. இந்த படத்தை பற்றி பேசுவதா? அல்லது தற்போது நடந்துவரும் பிரச்சனை பற்றி பேசுவதா? என்று குழப்பமாக உள்ளது. நான் யார் என்று யோசிக்கும் போது, சீதையும் நானும் உடன்பிறந்தவர் போல், அவர் அக்னியை மிதித்து கற்பை நிரூபித்தார். அதேபோல, நான் வாராவாரம் நிரூபித்து வருகிறேன்.
சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சனையில் கருத்தியல் ரீதியாக மோதிட முடியாதவர்கள் அனைவரும் எனக்கு எதிராக வெளியில் வருகின்றனர். 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தின் தயாரிப்பாளருடன் 10 வருடமாக தொடர்பு இருந்தது உண்மைதான், தம்பியாக பழகியவர்தான்; ஆனால், அவர் செய்த தவறில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என தைரியமாக என்னால் சொல்ல முடியும்.
நான் இப்போதும் சொல்லுவேன். இந்த படத்தை நம்பி நான் இல்லை. அடுத்தடுத்து வரும் மாயவலை, இறைவன் மிகப் பெரியவன் என்பதை நம்பி இல்லை. நான் விரும்பிய வாழ்க்கையை வாழ நினைக்கிறேன், ஆசைப்படுகிறேன் அவ்வளவு தான்.
நான் வெறுக்கும் குற்றத்தை என் மீது சுமத்துவதா?: குற்றப் பின்னணியில் இருப்பவரை நம்பி நான் வாழவில்லை, என்னை நம்பி நான் வாழ்கிறேன். இத்தனையும் சொல்லி நான் நல்லவன் என்பதையும் நிரூபிக்க சொல்லவில்லை. சிறைக்குப் போக அப்போதும் தயார்; இப்போதும் தயார். ஆனால், நான் வெறுக்கின்ற குற்றத்தை என் மீது சுமத்தும்போது என் குடும்பத்தை பாதிக்கிறது. என் மகள் பணியாற்றும் இடத்தில் கேள்விகள், மகன் படிக்கும் கல்லூரியில் வேதனைகள்.
துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டேன்: மேலும், டெல்லியில் நிச்சயமாக என்னிடம் சரியாக நடந்துகொண்டனர். அவர்களுடைய சில கேள்விகள் என்னை காயப்படுத்தியது. கலங்கி நின்றேனா என்றால் ஆம். கட்டாயம் கண் கலங்கி நின்றேன். ரம்ஜான் நாளில் நோன்பு முடிந்து அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது என் முகத்திற்கு நேராக துப்பாக்கியை நீட்டியபடி என்னை (ED) அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர்.
எனக்கு மீண்டும் சம்மன் வந்தது. இது ஏன் யாருக்கும் தெரியவில்லை? இத்தனை பிரச்சனைகளிலும் எனக்கு பக்க பலமாக இருந்தது, என் இரண்டு பிள்ளைகளும் குடும்பத்தினரும் தான். என் வாழ்க்கையில் ஒரு வெடி சத்தம் கேட்டதும் எல்லோரும் பறந்தனர்.
இறைவன் மிகப் பெரியவன்: ஆனால், அதனைத்தொடர்ந்து ஒவ்வொருவராக என்னை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர். இன்றே என்னை விட்டுவிலகி உள்ள நண்பர்கள் அங்கேயே இருங்கள் வந்துவிடாதீர்கள். 'பாரத் மாதா கி ஜெய்' என்றவர்கள் வாயில் 'இறைவன் மிகப் பெரியவன்' என சொல்ல வைத்ததை பெரிதாக பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “மாற்றத்துக்காக வேண்டுகிறேன்”.. ராகவா லாரன்ஸ்-க்கு ரஜினிகாந்த் வாழ்த்து!