ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜானி மாஸ்டர். இவருக்கு, கடந்த 2022ம் ஆண்டில் வெளியான நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் 'மேகம் கருக்காதா..பெண்ணே பெண்ணே' பாடலின் சிறந்த நடன காட்சிகளை அமைத்ததற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றிய 21 வயது பெண் நடன உதவி இயக்குநரை, கடந்த 2019ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஜானி மாஸ்டர் தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க : தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்; சில மணி நேரங்களிலேயே டிக்கெட் காலி!
இருப்பினும், தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கோவாவில் வைத்து தெலங்கனா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ஜானி மாஸ்டர் மனுத்தாக்கல் செய்ததையடுத்து, நீதிமன்றம் அவருக்கு அக். 6 முதல் 8 வரை நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை திரும்பப் பெறுவதாகவும், அவர் மீதான வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை விருது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வரும் அக் 8ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்