ஹைதராபாத்: ’புஷ்பா 2’ வசூல் உலக அளவில் 1000 கோடியை நெருங்கி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ’புஷ்பா 2’. புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.
'பாகுபலி' திரைப்படத்திற்கு பிறகு 'புஷ்பா' திரைப்படம் தெலுங்கு சினிமாவிற்கு முக்கியமான படமாக அமைந்தது. தென்னிந்தியாவை விட புஷ்பா முதல் பாகத்திற்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவி பிரசாத் ஆகியோர் தேசிய விருது வென்றனர். இதனால் புஷ்பா 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 2 நாட்களில் புஷ்பா முதல் பாகத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்தது. அதுவும் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் புஷ்பா 2 திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
பிரபல சினிமா இனையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி ’புஷ்பா 2’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் இதுவரை உலக அளவில் 880 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 593 கோடி வசூல் செய்துள்ளது. அதில் தெலுங்கு மொழியில் 211 கோடியும், ஹிந்தி மொழியில் 331 கோடியும், தமிழில் 34 கோடியும், கர்நாடகாவில் 4 கோடியும், மலையாளத்தில் 11 கோடியும் வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த காளிதாஸ் ஜெயராம்; திருமண புகைப்படங்கள் வைரல்!
புஷ்பா 2 திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது புஷ்பா 2 வசூல் 1000 கோடியை நெருங்கி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் வசூல் சாதனை படைத்த 2.0 படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்துள்ளது. மேலும் விரைவில் கல்கி, RRR, பாகுபலி பட சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.