ஹைதராபாத்: ஆஸ்கார் விருதுகள் நாளை(மார்ச்.11) அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்க உள்ளன. ஆஸ்கார் விருது விழா நிகழ்ச்சியை 4வது முறையாகப் பிரபலத் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்க உள்ளார்.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. சிறந்த இயக்குநர் பிரிவில் கிறிஸ்டோபர் நோலன் போட்டியிடும் நிலையில், அவருக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்கார் விருது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் பின்னணி என்ன? என்பது பற்றி கீழே காணலாம்.
ஆஸ்கார் விருது வடிவமைப்பு: ஆஸ்கார் விருதில், ஒரு மாவீரர் வாளைப் பிடித்திருப்பதைப் போன்று வடிவமைக்கப் பட்டிருக்கும். இந்த விருதில், மாவீரர் திரைப்படச் சுருள் மீது நிற்பது போன்று காட்சியளிக்கும். இதில், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் குறிக்கும் வகையில் 5 ஸ்போக்குகள் உள்ளன.
முதல் ஆஸ்கார் விருது எப்போது வழங்கப்பட்டது? கடந்த 1929ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டது. இதுவரையில் ஏறத்தாழ 3000 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
ஆஸ்கார் விருதின் எடை என்ன? ஆஸ்கார் விருது 13 1/2 உயரமும், 8.5 பவுண்டுகள் (சுமார் 4 கிலோ) எடையும் கொண்டது.
ஆஸ்கார் விருதை வடிவமைத்தது யார்? கடந்த 1928ஆம் ஆண்டு தயாரிப்பு வடிவமைப்பாளரும், கலை இயக்குநருமான ஆஸ்டின் செட்ரிக் கிப்பன்ஸ் (Cedric Gibbons) தான் ஆஸ்கார் விருதைவடிவமைத்தார். உருவத் தோற்றத்தை நடிகர் எமிலியோ பெர்னாண்டஸ் கொடுத்தார். 50 ஆஸ்கார் விருதை உருவாக்க மூன்று மாதங்கள் ஆகின்றன என்று கூறப்படுகிறது.
ஆஸ்கார் விருது எவ்வாறு அழைக்கப்பட்டது? ஆஸ்கார் விருது முதலில் 'அகாடமி விருது' என அழைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 1939ஆம் ஆண்டு முதல் 'ஆஸ்கார் விருது' என அழைக்கப்பட்டது.
ஆஸ்கார் விருதில் எந்த உலோகம் பயன்படுத்தப்படுகிறது? ஆஸ்கார் விருதில் 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட பிரிட்டானிய உலோகம் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக, இரண்டாம் உலகப் போரின் போது உலோகப் பற்றாக்குறையால் ஆஸ்கார் விருதுகளில் வர்ணம் பூசப்பட்ட பிளாஸ்டரால் செய்யப்பட்டன. போருக்குப் பிறகு இந்த பிளாஸ்டர் விருதுகளை மாற்றிக் கொள்ள ஆஸ்கார் நிறுவனம் வெற்றியாளர்களுக்கு அழைப்பு விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சவுதியில் கணவன் பிடியில் சிக்கிய மகள்! தாயின் பாசப் போராட்டம்! மத்திய அமைச்சருக்கு கடிதம்!