சென்னை: சித்தா பட இயக்குநர் அருண் குமார் தயாரிக்கும் ‘சியான் 62’ படத்தின் கதாநாயகியாக நடிகை துஷாரா விஜயன் இணைந்துள்ள செய்தி மக்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் அருண் குமார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது சியான் விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்களும் நடிக்க உள்ளதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது இவர்களுடன் கதையின் நாயகியாக நடிகை துஷாரா விஜயனும் இணைந்திருப்பதாக இன்று (ஏப்.06) வெளியாகியுள்ள செய்தி, ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி ஆகிய படங்களில் தனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களில் தனது உணர்ச்சிகரமான நடிப்பைச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளார். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் தனுஷின் 'ராயன்', ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகும் 'சீயான் 62' படத்தின் நாயகியாக, விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் நடிப்பதற்காக, நடிகர்கள் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.