சென்னை: தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் அழகி. இப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பார்த்திபன், தேவயானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பேசிய நடிகை தேவயானி, "இது சந்தோஷமான ஒரு தருணம். மீண்டும் எங்கள் படம் வெளியாகிறது. இப்படி நடக்கும் என்று நாங்கள் நடிக்கும் போது தெரியவில்லை. ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகப்பெரிய கஷ்டம். பிரசவம் கூட சுலபம் என்று நினைக்கிறேன், இது மிகப்பெரிய சாதனை. நல்ல படங்களை மீண்டும் கொண்டு வந்து, இன்றைய தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் எதாவது கற்றுக் கொள்வார்கள். என்னுடைய முதல் படமான காதல் கோட்டையில் தங்கர் பச்சான் தான் ஒளிப்பதிவாளர்.
தேசிய விருது வரை அந்த படம் சென்றது. எனக்கும் பெரிய பெயர் கிடைத்து, என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு மறுமலர்ச்சி எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இதேபோல அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர். அவரது ஒளிப்பதிவே ஒரு பெயிண்டிங் போல இருக்கும். அவருடைய ஒளிப்பதிவில் நான் மேக்கப் போடவே தேவையில்லை. இயல்பாக வந்து நடித்துவிட்டு போகலாம். என் திருமணம் முடிந்த சமயத்தில், இந்த படத்தில் நடிக்கும்படி தங்கர் பச்சான் கேட்டார்.
என்னதான் காதல் இருந்தாலும், நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனைவி தனது கணவனை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்கிற அந்த கதாபாத்திர வடிவமைப்பு எனக்கு ரொம்பவே பிடித்தது. பார்த்திபன் சாருடன் இணைந்து பல நல்ல வெற்றி படங்களில் நடித்துள்ளேன். அதில் அழகியும் ஒன்று, இப்போது பார்த்திபன் சாரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு வளர்மதி பிடிக்குமா? தனம் தான் பிடிக்குமா?” என்று கேட்டார். அதற்கு பார்த்திபன் நான் பேசும் போது பதில் சொல்கிறேன் என்று சொன்னார்.
இதையும் படிங்க: தங்கர் பச்சான் நாடாளுமன்றத்திற்கு சென்றால் அழகி 2 நான் தான் இயக்குவேன் - நடிகர் பார்த்திபன் பேட்டி! - Azhagi Re Release