சென்னை: கேஜேபி டாக்கீஸ் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் திரைப்படம் பல சர்ச்சைகளை கடந்து வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து ஹாட் ஸ்பாட் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வழங்குகிறார். அதன் அறிவிப்பு நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “நல்ல கதைகள் எப்போதும் வெற்றிபெறும். ஹாட் ஸ்பாட் டிரெய்லர் வெளியாகும் போது என்ன டிரெய்லர் இது? ஏன் இப்படி இயக்குனர்கள் செய்கிறார்கள்? என்று எனக்கு இயக்குநர் மீது கோபம் வந்தது. டிரெய்லர் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தேன். படத்தை பார்த்த பின்பு நிறைய யோசிக்க வைத்தது. இந்த தைரியம் எனக்கு பிடித்திருந்தது.
இப்போது இருக்கிற காலத்தில் குழந்தைகளை சரியாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த படத்தை என் மகனை பார்க்க வைத்தேன். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 4வது பாகம் எனக்கு ரொம்ப பிடித்தது. கண்டிப்பாக மாற்றுக்கருத்தை ஏற்படுத்தும். அதன் மூலமாக பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. நிறைய புதிய இயக்குநர்களோடு வேலை செய்து வருகிறேன் என்றார்.
நல்ல கதை சினிமாவிற்கு தேவை. நிறைய படங்களில் 2ஆம் பாகம் என்பதால் அந்த தலைப்பை வைத்து கொண்டு ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் அப்படங்கள் தோற்றுப் போகிறது. நானும் இரண்டாம் பாகம் படங்களில் நடிக்கிறேன், அதற்கான அறிவிப்பும் விரைவில் வரும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் வாக்குவாதம் குறித்த கேள்விக்கு, நானே நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பதால் எனக்கு இந்த பஞ்சாயத்து வரவில்லை.
சினிமா மாற்றத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது, வியாபார முறை மாறிவருகிறது. என்னைவிட பெரியவர்கள் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள். ஒரு தயாரிப்பாளராக எனக்கே தலை சுற்றுகிறது. இதனால் பின்னணியில் நிறைய விஷயங்கள் மாற வேண்டியுள்ளது. இதற்கு சினிமாவை பொறுத்த வரை தழுவல் முக்கியம். நிறைய விஷயங்கள் மாற வேண்டும், தற்போதைய வியாபாரம் தெரிந்து கொண்டு சிலவற்றை மாற்ற வேண்டும்” என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்