சென்னை: தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் வெளியானால் திரையரங்குகளில் தீபாவளி தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கடைசியாக நடித்து வெளியான ’லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் அள்ளியது.
இந்நிலையில் ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ’கோட்’. நாளை மறுநாள் (செப் 5) உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. விஜய்யின் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோட், முன்பதிவில் ஏற்கனவே பல்வேறு வசூல் சாதனைகள் படைத்துள்ளது. கோட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாதது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும், கோட் படத்தின் பாடல்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்நாட்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. தற்போது அதிக எதிர்பார்ப்புடன் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. முதல் நாள் அனைத்து பகுதிகளிலும் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உள்ளது.
முதல் பாதி ஒரு மணி 28 நிமிடங்களும், இரண்டாம் பாதி ஒரு மணி 34 நிமிடங்களும் ஓடுகிறது. இதில் மூன்று நிமிடங்கள் புளூப்பர் காட்சிகளும் உண்டு. தற்போது அனைத்து திரையரங்குகளுக்கும் கன்டென்ட் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு காட்சிக்கு இதுவரை தமிழ்நாடு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் பல்வேறு திரைப்படங்களில் காலை 7 மணி காட்சிகள் திரையிட டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோட் திரைப்பட ரீலிஸ் கொண்டாட்டத்தின் போது த.வெ.க கொடியை பயன்படுத்த வேண்டாம் என விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் படத்தை கொண்டாட வேண்டும் என்றும் விஜய் வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆந்திரா, தெலங்கானா மழை வெள்ள பாதிப்பு: 1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஜூனியர் என்டிஆர்! - Junior NTR donation to Flood relief