சென்னை: கீதா கோவிந்தம் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் பரசுராம், விஜய் தேவர்கொண்டா இணைந்துள்ள தி ஃபேமிலி ஸ்டார் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, மிருனாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய் தேவர்கொண்டா பேசுகையில், "இப்போதுதான் உங்களைப் பார்த்தது போல் இருக்கிறது, அதற்குள் எனது அடுத்த படத்திற்கு உங்களை சந்திக்கிறேன். எனது முதல் படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. கீதா கோவிந்தம் படத்திற்கு நீங்கள் மிகப் பெரிய அன்பு கொடுத்தீர்கள். இந்த படம் அதைவிட அடுத்த நிலையில் இருக்கும். கன்னத்தில் அறை வாங்கிய அனுபவம் இருக்கிறதா என்ற கேள்விக்கு எனக்கு கன்னத்தில் அறைவது பிடிக்காது.
கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா என் கன்னத்தில் அறைவார். இதிலும் மிருனாள் தாக்கூர் என்னை அறைகிறார். நான் கன்னத்தில் அறை வாங்குவதை ரசிக்கிறார்கள். ஆனால் இது மிகவும் சுவாரஸ்யமான காட்சி. என்னுடைய கதாபாத்திரத்திற்கு இது தேவையானது தான்.
எனது அடுத்த படம் ஆக்ஷன் படம் தான். தமிழில் எந்த மாதிரியான படங்களில் நீங்கள் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, தமிழில் ஏற்கனவே மாஸ் ஹீரோக்கள் இருக்கிறார்கள். எனது வயதிற்கு தகுந்த மாதிரி நல்ல பொழுதுபோக்கு படங்கள் பண்ண ஆசை. தமிழில் இருந்து நல்ல திறமையான இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளேன்.
அடுத்த சில மாதங்களில் எதாவது ஒரு கதையை தேர்வு செய்யவுள்ளேன். இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு கிடையாது. ஆனால் எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை. திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் ஆசை, ஆனால் இப்போது இல்லை. நிச்சயம் காதல் திருமணம் தான்.
ஆனால் எனது பெற்றோருக்கு அந்த பெண் பிடிக்க வேண்டும் என்றார். ராஷ்மிகாவை இந்த படத்தில் மிஸ் பண்ணுகிறீர்களா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக நானும் ராஷ்மிகாவும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் அவரைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்வோம். சரியான கதையை தேர்வு செய்து நானும் ராஷ்மிகாவும் இணைந்து நடிப்போம் என்றார். நடிகர் விஜய் மாதிரி நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, நான் ரொம்ப சின்ன பையன் பத்து படங்களில் தான் நடித்துள்ளேன். 20 படங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்றார். தயாரிப்பாளர் தில் ராஜூ பேசும் போது, "வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியது வைரலானது. தமிழ்நாட்டில் பாப்புலரான தயாரிப்பாளர் நீங்கள் தான் என்று விஜய் சொன்னார்.
இந்த படத்திலும் ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் இருக்கு என்றார். மேலும் தான் தயாரித்த பலகம் திரைப்படம் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அதில் எனக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை அப்படம் வென்றது.
இந்தியாவில் ஒரு சிறிய பட்ஜெட் படம் அத்தனை விருதுகளை பெற்றுள்ளது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். விஜய் உடன் விஜய் தேவரகொண்டாவை ஒப்பிட்டு நான் பேசவில்லை. ஹீரோ சம்பளம், இயக்குநர் சம்பளம், பட்ஜெட், நடிகரின் மார்க்கெட் எல்லாம் வைத்து தான் படம் தயாரிப்பேன் குறிப்பாக கதை தான் முக்கியம்" என்றார்.
இதையும் படிங்க: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி! - Siddharth Aditi Rao