சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, “கங்குவா திரைப்படம் ஆயிரக்கணக்கான கலைஞர்களின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி செயற்கை லைட் இல்லாமல் எடுத்துள்ளார். மேலும் கலை இயக்குநர் மிலன் இரவு பகல் பாராமல் உழைத்தார். கிட்டதட்ட 170 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அனைவரும் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இப்படத்தில் இயக்குநர் சிவாவிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். முதலாவதாக ’நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்’ என்பது தான். சிவா யாரது மனமும் புண்படும் படி நடந்து கொள்ள மாட்டேன் என்பார். 4,5 வருடங்களுக்கு முன்பு ரோலக்ஸ் சூர்யா போல கடுமையாக கோபப்படுவேன். ஆனால் தற்போது எனக்குள் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மன்னிப்பு என்ற அழகான விஷயத்தை புரிய வைத்தவர் சிவா, கங்குவா படத்திலும் மன்னிப்பு தான் முக்கிய கதையாகும்.
சினிமாவிற்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து விட்டேன். ஏற்றம் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்காது, கடந்த 2 ஆண்டுகளில் எனது சினிமா வாழ்க்கையில் தடுமாற்றம் இருந்தது. அதற்கு எல்லாம் பதிலாக நெருப்பு போல ’கங்குவா’ இருக்கும்.
இதையும் படிங்க: தவெக மாநாட்டிற்கு சென்னையிலிருந்து சைக்கிளில் செல்லும் ’பிகில்’ பட நடிகர்!
தற்போது லயோலா கல்லூரி குறித்து பேச்சு எழுந்தது. அக்கல்லூரியில் படித்தவர்கள் தற்போது பெரிய இடத்தில் இருக்கின்றனர். லயோலாவில் படித்த நான் ’பாஸ்’ என அழைக்கக்கூடிய உதயநிதி தற்போது துணை முதல்வராக இருக்கிறார். எப்போதும் எளிதாக அணுகக்கூடிய இடத்தில் இருக்கிறார். மற்றொரு நண்பர் (நடிகர் விஜய்) புதிய பயணத்தை தொடங்குகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்