சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர், விக்ரம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சித்தா படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், தற்போது விக்ரம் நடித்து வருகிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு ‘சீயான் 62’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கும் இந்தப் படத்தில், விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸ் (HR Pictures) பட நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் நேற்று (பிப்.9) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், அண்மைக்காலமாக எந்த வேடம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்தி, ‘நடிப்பு அரக்கன்’ எனும் நற்பெயரை சம்பாதித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படத்தின் நட்சத்திரப் பட்டியலில் இணைந்திருக்கிறார். அத்துடன் எஸ்.ஜே.சூர்யா அவருடைய திரைப் பயணத்தில் இதுவரை பார்த்திராத, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.
இதனை படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது. சீயான் விக்ரமும், எஸ்.ஜே.சூர்யாவும் முதன் முறையாக கூட்டணி அமைத்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக வணிகர்கள் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: லால் சலாம்; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவம் பொருந்திய கொடி உடன் திருச்சி ரசிகர்கள்!