சென்னை: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது.
அமரன் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஜீ.வி.பிரகாஷ் இசையில் முதல் சிங்கிள் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அமரன் திரைப்படக் குழு தீவிர ப்ரமோஷனில் இறங்கியுள்ளது. மலேசியாவில் அமரன் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “சிறிய வயதில் இருந்தே அப்பாவின் போலீஸ் சீருடையை பார்த்து வளர்ந்த காரணத்தினால் இந்த கதையில் ஒரு ஈர்ப்பு வந்தது.
இந்த கதையை கேட்ட பிறகு எனது தந்தைக்கும், மேஜர் முகுந்திற்கும் நிறைய ஒற்றுமையை பார்த்தேன். மேலும் இந்த கதை மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும். ராணுவ உடையை அணிந்து கொண்டு முதல் காட்சியில் நடித்து முடித்த போது எனக்கு மிகவும் கெத்தாக இருந்தது. டீசரில் இடம்பெற்றுள்ள who are we என்ற வசனத்துடன் வரும் காட்சி நடித்து முடித்த உடன் அங்கு இருந்த ராணுவ விரர்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா: 7வது தேசிய விருது பெற்றார் ஏ.ஆர் ரஹ்மான்!
இந்த படத்திற்காக விருப்பத்துடன் உடற்பயிற்சி செய்தேன். மேஜர் முகுந்தின் மனைவி மற்றும் குழந்தையை பார்க்கும் போது எனது அம்மா மற்றும் அக்காவை பார்ப்பது போல் இருந்தது. ஏனென்றால் என் அப்பா போலீஸ் வேலையில் இருக்கும் போது வேலை பளு தாங்காமல் இறந்தார். என் அப்பாவிற்கு அப்போது 50 வயது, அதேபோல் மேஜர் முகுந்த் உயிரிழக்கும் போது அவருக்கு 30 வயது இருக்கும். எந்த கஷ்டத்தையும் சமாளித்து விடலாம், ஆனால் ஒருவர் உயிருடன் இல்லாத கஷ்டத்தை சமாளிக்க முடியாது” என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்