சென்னை: இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா உள்ளிட்டோர் இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22ஆம் தேதி வெளியான திரைப்படம் ’ஜீப்ரா’ (Zebra).
புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜீப்ரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நல்ல விமர்சனம் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடுகிறது. எல்லா பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக் கொள்ளவில்லை.
இப்படத்தில் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்த சத்யதேவுக்கு நன்றி. தமிழில் இப்போது பிஸியான ஆள் அசோக் தான். பான் இந்தியப் படங்கள் அதிகமானவுடன், இவர் வேலை அதிகமாகிவிட்டது. ஒரு படத்தில் எடிட்டர் பற்றிப் பாராட்டுகிறார்கள் என்றால், அவர் உழைப்பு அப்படிப்பட்டது. இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார்.
படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார். இப்படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
KGF படப்புகழ் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் சுமன் பிரசார் பாகே இணை தயாரிப்பாளராகவும், சத்யா பொன்மர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஜீப்ரா பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: கர்நாடக மாநிலத்தில் மூகாம்பிகை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சூர்யா, ஜோதிகா ஜோடி!
சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ’லக்கி பாஸ்கர்’ பட பாணியில் வங்கி ஊழியரின் புத்திசாலித்தனம் பற்றிய படமாக இது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜீப்ரா படக்குழுவினர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்