சென்னை: சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகின்ற 13ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகரான ராம்சரண் தமிழில் மாவீரன், ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பிரபலமடைந்தார். இவரது படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவை. ஐசரி கணேஷ் கோமாளி, வெந்து தணிந்தது காடு, எல்கேஜி என ஏராளமான வெற்றிப் படங்களைத் தமிழில் தயாரித்துள்ளார். இந்த நிலையில் 13ஆம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம் சரணுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம் சரணின் கலைச் சேவையைப் பாராட்டும் விதமாக அவருக்குச் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. ராம்சரணுக்கு இந்த விருதை அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தலைவர் சீத்தாராம் வழங்க உள்ளார். மேலும் இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
ராம்சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் பேரனைக் காதலிக்கிறாரா ஜான்வி கபூர்? - Janhvi Kapoor Shikhar Pahariya