சென்னை: மண் மணம் மாறாத பல கிராமிய படங்களில் கதாநாயகனாக நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான், மக்கள் நாயகன் ராமராஜன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது, 'சாமானியன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு, இளையராஜா இசை அமைத்துள்ளார்.
அந்த வகையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ராமராஜன், கே.எஸ்.ரவிக்குமார், சரவணசுப்பையா, பேரரசு, எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்தின் இயக்குநர் ராகேஷ், லியோனி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், "ராமராஜன் படத்திற்கு வந்த கூட்டத்தை பார்த்து தான் பயந்துவிட்டதாக, ரஜினிகாந்த் என்னிடம் கூறியுள்ளார். நான் உதவி இயக்குநராக ஷீல்ட் வாங்கிய படம், 'ராஜா ராஜாதான்'. அவருக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து, அவர் மீண்டு வந்ததே மிகப்பெரிய விஷயம். மீண்டும் இளையராஜா இசையில் ராமராஜன் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
தொடர்ந்து ராமராஜன் பேசுகையில், "நான் விபத்தில் சிக்கி, மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். எனக்கு பொருந்துவது போல், இயக்குநர் இப்படத்தை எடுத்துள்ளார். என் ரசிகர்கள் இப்படத்தை மிகப்பெரிய வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இக்கதையை யாரும் கடந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அருமையான கதை. ஆண்களும் ஃபீல் (Feel) பண்ணக்கூடிய வகையில் படம் இருக்கும்.
இளையராஜா வருவார் என்று நினைத்தேன். 2000ல் இருந்து இப்போது வரை, மூன்று படங்களில் தான் இணைந்து பணியாற்றி உள்ளோம். இன்றும் ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால், அதற்கு இளையராஜாவின் பாட்டுதான் காரணம். அந்த பாட்டுதான் என்னை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது. உலகமே புகழக்கூடிய இசையமைப்பாளர் இளையராஜா தான்.
அவர் தொட்ட உச்சத்தையும், அவர் வாங்கிய புகழையும் இனி எந்த இசையமைப்பாளராலும் பெற முடியாது. இளையராஜாவின் அம்மா தெய்வத்தாய், தனது மூன்று மகன்களையும் இசைக்காக அர்ப்பணித்தவர். இளையராஜாவின் குரலிலும், விரலிலும் என்ன வைத்துள்ளார் எனத் தெரியவில்லை. இளையராஜா ஆர்மேனியம் வாசித்தபோது, பாம்பேயே பயந்தது. அவர் சாதாரண மனிதர் அல்ல.
நீயும், நானும் சேர்ந்தாலே அங்கு பாட்டுதான் முக்கியம். ஆனால், இந்த படத்தில் பாட்டே இல்லாமல் இருக்கிறதே என இளையராஜா வருந்தினார். அதன்பிறகு இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டது. அடுத்த படத்தில் நிச்சயம் ஆறு பாடல்கள் இருக்கும். அவர் மகள் இறந்து இரண்டு மாதம் தான் ஆகிறது. ஆகையால், அவரை இந்நிகழ்ச்சிக்கு கூப்பிடவே சங்கடமாக இருந்தது. சினிமாவில் நன்றி விசுவாசம் சாகவில்லை, இப்போதும் இருக்கிறது என உணர வைத்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தான்.
சிங்கப்பூரில் வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகன் நான் தான். இப்போதெல்லாம் 100 நாட்கள் கிடையாது, பத்து நாட்கள் தான். என்னை நம்பி இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மதியழகனுக்கு நன்றி. இப்படத்தை எனது ரசிகர்கள் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் - DANIEL BALAJI