சென்னை: 'மாங்குயிலே பூங்குயிலே' என்ற பாடல் மூலம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்த நடிகர் ராமராஜன். 80 மற்றும் 90களில் "மக்கள் நாயகன்" என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் . கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து, மக்களின் மனதை தனது நடிப்பால் கவர்ந்தவர்.
இந்த 45 வருடங்களில், தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சாமானியன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் நடிகர் ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.
'தம்பிக்கோட்டை', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.ராகேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட் சார்பில், வி.மதியழகன் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் மூலம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 29ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, தனது ரசிகர்கள் அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ராமராஜன் அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் எனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். வருகிற 29.3.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில், சமானியன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கத்தில் நடை பெற உள்ளது. அனைவருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
இருப்பினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உங்களை எல்லாம் நேரில் காண இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இளையராஜா அனைத்து பாடலையும் எழுதி இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் உள்ள என் உயிரினும் மேலான ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் கலந்து, விழாவினைச் சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாஸ் காட்டும் சூர்யாவின் 'கங்குவா' டீசர்.. மூன்று நாட்களில் 2 கோடி பார்வையாளர்கள்! - kanguva teaser