தென்காசி: கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள எஸ்எஸ்எஸ் (SSS) திரையரங்குக்கு நேற்று நடிகர் ராமராஜன் நடித்த 'சாமானியன்' திரைப்படத்தின் 35வது நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ரசிகர்களைச் சந்திப்பதற்காக ராமராஜன் வந்திருந்தார். அப்போது ராமராஜனுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு வந்த குழந்தைகளிடம் செல்ஃபி எடுத்து ராமராஜன் மகிழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ராமராஜன், "நான் திரையரங்கில் வேலை பார்த்துள்ளேன். அப்பொழுது தினமும் 3, 4 காட்சிகளைப் பார்ப்பேன். அனைத்து நடிகர்கள் நடித்த படங்களையும் பார்த்துள்ளேன். ஆனால் என்னைக் கவர்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டும் தான். அவர் எந்த தவறும் செய்யாமல் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்தது. அதையே நானும் ரோல் மாடலாக எடுத்து படத்தில் நடித்தேன். மேலும், எத்தனை கோடி கொடுத்தாலும் ரசிகர்களுக்கும், பெண்களுக்கும் பிடிக்காத காட்சிகளை நடித்தது இல்லை என்றார்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய அவர், மக்களையும், என்னையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது. என்ன நடந்தாலும் மக்களையும், இந்த நாயகனையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது. அதனால் தான் தனக்கு மக்கள் நாயகன் என்ற பட்டம் கிடைத்துள்ளது.
தற்போது திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிகமாக உள்ளது. ரஜினி, கமல் என அனைவரது படத்தையும் பார்க்க விரும்பினாலும், டிக்கெட் விலை அதிகமாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும். திரையரங்கில் முதல் ரோவில் இருப்பவருக்கு ரூ.50 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமணம் கோலாகலம்!