சென்னை: ‘குட் நைட்’ (Good Night) படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் (Lover) படத்தை, அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ளார். ஸ்ரீகெளரி பிரியா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில், குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் மேடையில் பேசுகையில், “சமீபத்தில் நான் பார்த்த படங்களில் சிறந்த படம் இது. விரைவில், இப்படத்திற்கு சக்சஸ் மீட் (Success Meet) வைக்கும் அளவிற்கு வெற்றி பெறும். ஆண், பெண் உறவு சார்ந்த முக்கியமான படம் லவ்வர். படத்தை பார்த்த பிறகு உறவைப் பற்றி ஒரு புரிதல் ஏற்படும்” என்றார்.
நிகழ்ச்சியில், பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசுகையில், “திரைத்துறையில் நான் முதல் பாடல் எழுதி வெளியானது இந்த மேடையில் தான். 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. குட் நைட் படத்தில் அனைத்து பாடல்களையும் நான் எழுதியுள்ளேன். அப்படத்தில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி. ஆரம்ப காலகட்டத்தில் பாடலாசிரியர்களை மேடையில் ஏற்றமாட்டார்கள். இன்று பாடலாசிரியராக நான் மேடையில் நிற்கிறேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.
பின்னர், நடிகர் மணிகண்டன் மேடையில் பேசுகையில், “லவ்வர் படத்தை இயக்குநர் மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படத்தை பாருங்கள்” என்றார். இவரைத்தொடர்ந்து பேசிய இப்படத்தின் இயக்குனர் பிரபுராம் வியாஸ், “நான் கதை எழுதி முடித்தப் பிறகு, இந்த கதாபாத்திரத்திற்கு எனக்கு தோன்றிய முதல் முகம் மணிகண்டன். நடிகர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர்களால் இப்படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டுள்ளது” எனப் பேசினார்.
இதையும் படிங்க: தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இறங்குமா? திராவிட கட்சிகளுக்கு இணையான போட்டியா? - செய்தித் தொடர்பாளர் அளித்த பிரத்யேக தகவல்!