சென்னை: பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சிறு வயது முதல் திரைப்படங்களில் நடித்து வந்த காளிதாஸ் ஜெயராம், 'ஒரு பக்க கதை' திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்தார்.
இதனைத்தொடர்ந்து தனது தாய் மொழியான மலையாள படங்களிலும் நடித்து வந்தார். சுதா கொங்குரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு நடித்த ‘பாவக் கதைகள்’ என்ற ஆந்தாலஜி தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படம் காளிதாஸ் ஜெயராமுக்கு தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக பெயர் வாங்கி கொடுத்தது.
இதனைத்தொடர்ந்து ’ராயன்’ படத்தில் காளிதாஸின் கதாபாத்திரமும் கவனம் பெற்றது. காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரிணி என்பவரை காதலித்து வந்தார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், விரைவில் இந்த நட்சத்திர ஜோடிக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இந்த வாரம் 'வேட்டையன்' படத்தோடு மோதப் போகும் தமிழ்ப் படங்கள் என்ன?
இந்நிலையில் நடிகர் ஜெயராம், தனது மனைவி, மற்றும் காளிதாஸ் ஜெயராமுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். இதுகுறித்து காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தாருடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து திருமணத்திற்கு அழைப்பிதழை வழங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்