சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் கவுண்டமணி. கேலி, கிண்டல் என தனது நகைச்சுவையால் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் கவுண்டமணி.
இப்போதும் இவரது வசனங்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக வலம் வருகின்றன. அந்த அளவுக்கு இவரது காமெடி நம் எல்லோரது அன்றாட வாழ்க்கையிலும் கலந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது பழனிச்சாமி வாத்தியார், ஒத்த ஓட்டு முத்தையா ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதில் ஒத்த ஓட்டு முத்தையா படத்தை ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபால் இயக்குகிறார். கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்ராயன், லேகா ஶ்ரீ, டி.கே.ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் களம் இறங்குகிறது.
மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.
இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 25 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இதில் பதவி ஏற்பு விழா என போஸ்டரில் போட்டுள்ளனர். மேலும், விரைவில் பொதுமக்களை சந்திக்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "மோடி 3வது முறையாக பதவி ஏற்பது சாதனை".. ரஜினிகாந்த் புகழாரம்! - RAJINIKANTH