சென்னை: நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கி நடித்து வெளியான சேவகன், ஜெய்ஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டு 'சொல்லிவிடவா' என்ற படத்தை இயக்கி இருந்தார். அப்படத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் 'சீதா பயணம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தயாரித்து, இயக்கியுள்ளார். இதில் அவரது மகள் ஐஸ்வர்யா மற்றும் நிரஞ்சன் சுதீந்திரா நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார். சீதா பயணம் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சவுந்தர்யா VS சுனிதா... பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் முற்றும் மோதல்!
சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. சீதா பயணம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அர்ஜூன் முன்னதாக விஜய்யுடன் ’லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், தற்போது அஜித்துடன் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்