சென்னை: இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் "ரசவாதி". இந்தப் படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸ், தான் சினிமாவில் இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று (மே 4) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இத்தனை ஆண்டுகள் தன்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி. கூலி படத்திற்காக இதுவரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூப்பிடவில்லை. அப்படிக் கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன். இந்தியில் ஒரு படம். தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படம் நடித்து வருகிறேன். மேலும் மலையாளத்திலும் நடித்து வருகிறேன். அதிக ரசிகர்கள் தனக்கு இருப்பதாகச் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
மேலும், ஐஸ்வர்யா லட்சுமி உடனான நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் பல்வேறு கிசுகிசுக்களை ஏற்படுத்தியது, அது உண்மையா, தற்போதைய நிலை என்ன என்ற கேள்விக்கு, “அவர் அருமையான நண்பர். மற்றபடி காதல் இல்லை. மேலும், தற்போதைக்கு திருமணம் கிடையாது” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் பணியாற்றிய வங்கிப் பணியை விட நடிகராக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். லோகேஷ் கனகராஜின் 'இனிமேல்' ஆல்பம் பாடலில் நன்றாக நடித்திருந்தார். கூலி படம் இருப்பதால், இதன் பிறகு தொடர்ந்து நடிப்பாரா எனத் தெரியவில்லை. எதிர்காலத்தில் நடிப்பது குறித்தும் அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு நண்பர், வழிகாட்டியாக இருந்துள்ளார். என்னுடைய எல்லா இடத்திலும் அவரைப் பற்றி பேச அவர்தான் காரணம். அவரால் தான் நான் இந்த இடத்தில் உள்ளேன். நடிகர்கள் கமல், விக்ரம், சூர்யா போல உடலை வருத்தி நடிக்கத் தயார்.
அதற்கேற்பக் கதைகள் அமையும் பட்சத்தில், அது நன்றாக வரும் நேரத்தில், கட்டாயம் அந்த முயற்சியை எடுப்பேன். என்னுடைய படங்களில் வன்முறை அதிகமாக இருப்பது உண்மைதான். இனி வரும் படங்களில் அதனைக் குறைத்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூலி படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் விவகாரம்; ரஜினிகாந்த் கூறிய பதில் என்ன தெரியுமா? - Rajinikanth About Coolie Copyright