ஹைதராபாத்: 'புஷ்பா 2' திரைப்பட சிறப்புக் காட்சியின் போது உயிரிழப்பு ஏற்பட்ட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது 'புஷ்பா 2'. இப்படத்தின் சிறப்புக் காட்சி கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
அப்போது அந்த சிறப்புக் காட்சியை பார்க்க அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் வருகை புரிந்தார். அப்போது கூட்டம் அலைமோதியது. அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து ரேவதி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அப்பெண்ணின் குடும்பத்தார் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் பெண் உயிரிழந்த வழக்கின் விசாரணைக்காக இன்று (டிச.13) நடிகர் அல்லு அர்ஜூன் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: 13 வருடங்களுக்கு பிறகு செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணி; ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தனுஷ்! - SELVARAGHAVAN MOVIE FIRST LOOK
அல்லு அர்ஜூன் ஹைதராபாதில் உள்ள சிக்கட்பல்லி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். ’புஷ்பா 2’ சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூனை காவல்நிலையம் அழைத்துச் சென்ற விவகாரம் தெலுங்கு சினிமாத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.