சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து, இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித்குமார் தனது 63வது படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
குட் பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கி, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அஜித் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், ஜூன் 20ஆம் தேதி முதல் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெற்று படத்தை இந்தாண்டுக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் அஜித் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “முதலில் தனுஷ்.. இப்போது ஜி.வி...” கே.ராஜன் வைத்த முக்கிய வேண்டுகோள்! - K Rajan About Film Stars Divorce