சென்னை: பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (The Goat Life) திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் அமலாபால், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், கே.ஆர்.கோகுல், அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி, ரிக்காபி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு அனுபவித்த நரக வேதனைகளையும் அவர் மீண்டும் தாயகம் திரும்பிய, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பென்யாமின் (பென்னி டேனியல்) 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலை எழுதினார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளனர். 2008ஆம் தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைக்கு வரவுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் நடிகர் பிரித்விராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ, இயக்குநர் பிளெஸ்ஸி ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து நடிகர் நடிகர் பிருத்விராஜ் பேசுகையில்," 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த படம் இது, அந்த நேரத்தில் மிகப்பெரிய இயக்குநராக இருந்த இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தைக் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
அதற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்துள்ளார். 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் பிரம்மாண்ட படைப்பாக வருவதற்கு ஏ.ஆர் ரகுமான் தான் காரணம். 2008ஆம் ஆண்டு இத்திரைப்படத்தைத் தொடங்கும் போது யாரை இசையமைப்பாளராகப் போடலாம் என ஆலோசிக்கையில் இரண்டு பெயர்கள் மட்டுமே எங்கள் ஞாபகம் வந்தது.
அதில் ஒருவர்தான் ஏ.ஆர்.ரகுமான். ஆனால், அவரை எப்படி அணுகுவது என்று கூட எங்களுக்கு தெரியாது. அதன்பிறகு எங்களுடன் ஏ.ஆர்.ரகுமான் இணைந்தது எங்களை மேலும் வலுப்படுத்தியது. இது வெறும் கதை கிடையாது; ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கை, இதனைப் படமாக்கி முடிக்க பல இன்னல்களைச் சந்தித்தோம்.
இந்த ஆடு ஜீவிதம் படத்திற்கு இடையில்தான் நான் ஒரு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லாமே இதற்கு இடையில்தான்" என்றார். இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பேசுகையில்," இந்த படம் ஒப்புக்கொள்ளும் போது என்னுடைய சொந்த பட பணிகள் இருந்தது.
இதற்கு இடையில்தான் இந்த படத்தின் பணிகளை மேற்கொண்டேன். இந்த படம் விரைவாக முடியும் என நினைத்தேன். ஆனால், 6 வருடம் ஆகிவிட்டது. இது மரியான் போல இருக்குமா? என யாரோ என்னிடம் கேட்டார்கள், மரியான் என்பது பிக்சன் திரைப்படம் இது உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.
உலகம் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கையில் அமைதியாக, நிதானமாக ஒரு அழகான படத்தை எடுத்துள்ளனர். இது போன்ற ஒரு படைப்பை உருவாக்க பிளெஸ்ஸி, பிருத்விராஜ் ஆகிய கலைஞர்களால் தான் முடியும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து இயக்குநர் பிளெஸ்ஸி,"இந்த படத்திற்கு அளப்பரிய உழைப்பைக் கொடுத்துள்ளார், ஏ.ஆர் ரகுமான். அதற்காக அவருக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தியாவில் நாம் காணாத பல ஆயிரம் பேர் இன்னும் குடும்பத்தை இழந்து, எங்கோ கஷ்டப்பட்டு கொண்டுதான் உள்ளனர். அது போன்ற ஒரு திரைப்படம் தான் இது" எனப் பேசினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் மீட்பு.. தென்மண்டல ஐஜி கூறுவது என்ன?