சென்னை: துணைவேந்தர் நியமனம் செய்வதில் அரசு மற்றும் ஆளுநர் இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட விதிகளினால், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனிடையே, துணைவேந்தர் நியமனம் குறித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களில் பட்டங்களை வழங்க பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி அனுமதி வழங்க வேண்டுமென உயர் கல்வித்துறை கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்திருந்தது. இதில் சுமார் 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் சுமார் 13 மாதமாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களின் பட்டப் படிப்பு சான்றிதழில் துணைவேந்தரின் கையொப்பம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது சென்னை பல்கலைக்கழகத்தின் விதியாக இருக்கிறது.
இதையும் படிங்க: "இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நிலைக்கு வந்துள்ளோம்" - அமைச்சர் துரைமுருகன்!
இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் கையொப்பமிட வேண்டிய துணைவேந்தர் இதுவரையில் நியமிக்கப்படாமல் உள்ளதால், இம்மாத இறுதியில் பட்டமளிப்பு விழாவை எப்படி நடத்த முடியும் என்று சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள சிண்டிகேட் குழு கூட்டத்தில் துணைவேந்தருக்கு மாற்றாக பட்டமளிப்பு சான்றிதழில் யார் கையொப்பமிட வேண்டும் என்பது குறித்து அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆட்சி மன்றக் குழு கூட்டத்திலும் அனுமதி பெற்று, பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இது போன்ற பல்வேறு சிக்கல்களால், பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதிக்குள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, துணை வேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை நடத்துவது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில், மாணவர்களின் பட்டப் படிப்பு சான்றிதழில் துணைவேந்தருக்கு மாற்றாக வேறு யாரேனும் கையொப்பமிட்டால், அது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.