சென்னை: கடந்த 2023-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group IV) இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 23 வகையான பணிகளில் மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அதற்கான தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதினர்.
சமீபத்தில் குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் வெளியானது. அப்போது, குரூப் 4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், நான்கு முறை அதிகரிக்கப்பட்டு தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னதாகவே நடைபெற்று முடிந்த குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வெளியான நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (Group IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / வரித்தண்டலர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் ஜனவரி 22 முதல் மார்ச் 12 வரை நடைபெறவுள்ளது.
— TNPSC (@TNPSC_Office) January 9, 2025
இது, பிப்ரவரி 6, 7, 18 முதல் 21 வரை மற்றும் மார்ச் 7 ஆகிய நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடக்காது. இந்த சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600-003 உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேற்குறிப்பிட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / வரித்தண்டலர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு!
தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள் நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணை பிப்ரவரி 7-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டுத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.