சென்னை: 2022 - 2024ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டித்தல் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் நேற்று (பிப்.29) அறிக்கை வெளியிட்டார்.
அந்த அரசாணையில், "அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளானது, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முறையே 2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதங்களில் முடிய உள்ளது.
இதனைச் சிறப்புத் தேர்வாகக் கருதி, 2024 - 2025ஆம் கல்வியாண்டில் புதியதாக சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய பள்ளி மேலாண்மைக் குழுவினை அமைக்கும் பொருட்டு, 2022 - 2024 ஆண்டிற்கான தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.
புதிய உறுப்பினர்கள் மறுகட்டமைப்பிற்கான முன்மொழிவு கால அட்டவணையில் (2024-2026) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவின் காலம் ஜூலை 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 50 சதவீதம் தொடக்கப் பள்ளிகளுக்கான 50 சதவீதம் தொடக்கப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் காலம் ஜூலை 27ஆம் தேதி வரையும், மீதமுள்ள 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கான காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையும், அதேபோல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் காலம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2024 - 2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.