சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வைத்த கோரிக்கையை ஏற்று, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் புதிய படிப்புகளை துவங்குவதற்கு தமிழக அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில், "கிண்டி, கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 8 சான்றிதழ் படிப்புகள், 2 பட்டயப் படிப்புகள், 1 பட்டப் படிப்பு உட்பட 11 துணை மருத்துவப் படிப்புகளை நடப்பு கல்வியாண்டிலிருந்து தொடங்க அனுமதிக்கப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் ஓராண்டு படிப்பு மற்றும் 3 மாத பயிற்சியை உள்ளடக்கிய மயக்கவியல், அறுவை சிகிச்சை அரங்கு, இதயவியல் சோனோகிராபி, இதய இடையீட்டியல் ஆய்வகம், டயாலிசிஸ், அவசர சிகிச்சை, இசிஜி தொழில்நுட்பநர் படிப்புகளில் தலா 20 இடங்களுடன் தொடங்க அனுமதி அளிக்கிறது. அதேகால அளவிலான PUMP TECHNICION தொழில்நுட்பநர் படிப்பினை 10 இடங்களுடன் தொடங்க ஒப்புதல் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் சான்றிதழ் படிப்புகளாகும்.
2 ஆண்டுகள் படிப்பு மற்றும் 3 மாத கால உள்ளுறை பயிற்சி கொண்ட ரேடியோ பரிசோதனை தொழில்நுட்ப டிப்ளமோ (டிஆர்டிடி) படிப்பையும், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப டிப்ளமோ (டிஎம்எல்டி) படிப்பையும் தலா 20 இடங்களுடன் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு உள்ளுறை பயிற்சி கொண்ட பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி பட்டப் படிப்பை 5 இடங்களுடன் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்