சென்னை: சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்ககளின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் பொதுக்குழுக்கூட்டம் நேற்று(செப்.18) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நாளை(செப்.20) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.
"சென்னைப் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 22 பேராசிரியர்களின் நியமனம் குறித்து உயர்நீதிமன்ற ஆணையின்படி விசாரணைக்குழு அமைக்கபட வேண்டும். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பேராசிரியர்கள் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்த விசாரணை முடியும் வரையில் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏழாவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகை வருகின்ற 18.9.2024க்குள் வழங்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே பதவி உயர்வு (CAS) பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது (CAS) நிதிக்குழுவின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறையைப் புகுத்தி பதவி உயர்வுகளை வழங்கு வழங்குவதில் தேவையற்ற காலதாமதத்தை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையை கைவிட்டு ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி பதவி உயர்வுகளை வழங்க நிர்வாகம் உடனடியாக நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை; மதுரை காமராஜர் பல்கலையின் இந்த பரிதாப நிலைக்கு என்ன காரணம்? - MADURAI KAMARAJ UNIVERSITY
அலுவலர்களுக்கு ஏற்கனவே உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருந்து பதவி உயர்வுகள் காலந்தாழ்த்தி 2024ஆம் ஆண்டு ஜூலை 31 வழங்கப்பட்டன. உயர்கல்வித்துறை செயலாளர் பரிந்துரையின்படி ஆட்சிமன்றக்குழு கூட்டத்தின் ஒப்புதலோடு, பதவி உயர்வுகளைப் பெற்ற அலுவலர்களுக்கு இன்று வரை உரிய பணியிடங்கள் அளிக்கப்படவில்லை ஆகையால் அவர்களுக்கு உடனடியாக இன்றே பணியிடங்களுக்கான ஆணைகளை வழங்கிட வேண்டும்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாகவும், அதனைத் தொடர்ந்து நாளை மாலையில் மீண்டும் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் கூறியுள்ளனர்.