சென்னை: தமிழ்நாட்டில் இரு மாெழிக் காெள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், இந்தியை படிக்க விரும்பினால் படித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தென்னிந்தியாவில் இந்தியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதுடன், ஆண்டுக்கு 3 லட்சத்து 50 மாணவர்கள் இந்தி படிக்கின்றனர் என்று இந்தி பிரச்சார சபா தெரிவித்துள்ளது.
இந்தி பிரச்சார சபாவின் மூலம் இந்தி படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஏற்கனவே இந்தி படித்த பண்டிட் மூலம் இந்தியை கற்றுக் கொண்டு தேர்வினை எழுதி சான்றிதழ்களை பெறுகின்றனர். இந்தி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்தி மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்பும் நிலையில், இந்தி மொழி திணிப்பதை அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ்நாடு அரசும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான மாணவர்கள் இந்தியைப் படிக்கின்றனர் என்பது புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா வெளியிட்டுள்ள தகவலில், “2024ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இந்தி தேர்வை சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் 3 லட்சத்து 54 ஆயிரத்து 655 மாணவர்கள் எழுதியுள்ளனர். 8 பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் தேர்வினை எழுதி வருகின்றனர்.
ஆந்திராவில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 959 பேர், கர்நாடகாவில் 5 ஆயிரத்து 584 பேர், கேரளாவில் 8 ஆயிரத்து 452 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் குறிப்பாக, சென்னையில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 611 பேர் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ளனர்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 5 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வு.. வானுயர வைத்த புதுக்கோட்டை வயலோகம் அரசுப் பள்ளி..!