மும்பை: வாரத்தின் முதல் நாளான நேற்று (ஜூன்.17) பங்குச் சந்தை வழக்கம் போல் நிறைவடைந்த போதிலும், இன்று (ஜூன்.18) காலை முதலே பல்வேறு துறைகளில் குவியும் முதலீடுகள் மூலம் அதிகரிக்கத் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்ச்சந்தை 334 புள்ளிகள் அதிகரித்து 77 ஆயிரத்து 326 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மாருதி, எச்டிஎப்சி வங்கி என பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான போதிலும் மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட திடீர் வர்த்தகம், புதிய அந்நிய செலாவணி முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை திடீர் உயிரோட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 108 புள்ளிகள் அதிகரித்து முதல்முறையாக 23 ஆயிரத்து 573 புள்ளிகளை எட்டியுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 நிறுவனங்களில் விப்ரோ, டைட்டன், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டெக் மகேந்திரா, இன்போசிஸ், பாரதி ஏர்டெல், இந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகரித்ததை அடுத்து பங்குச் சந்தை புது உச்சம் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐசிசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கிகளின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. இந்தியாவை தொடர்ந்து மற்ற ஆசிய நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா மற்றும் ஹாங் காங் பங்குச் சந்தைகளும் குறிப்பிட்ட அளவில் உயர்வை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 6 ஆண்டுகளில் 38% அதிகரித்த இந்தியாவின் இ-காமர்ஸ் பரிவர்த்தனை! சீனாவுடன் கடும் போட்டி! - India E Commerce Market