மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (ஆக.8) வெளியிட்டார். அப்போது ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும் எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 9-வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
ஆனால் தொடர்ந்து 9-வது முறையாக ரெப்போ வட்டி மாற்றப்படாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையவும் செய்யாது, ஏறவும் செய்யாது பழைய நிலையே தொடரும் என தெரிகிறது. பலருக்கும் ரெப்போ விகிதம் என்றால் என்ன என்பதில் சந்தேகம் எழலாம், ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.
இதனை இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி முடிவுகள் எடுப்பர்.கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததற்கு காரணம் ஒட்டுமொத்த பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நிர்ணயித்த வரம்புக்குள் வராததே எனக் கூறப்படுகிறது.
மேலும் ரிசர்வ் வங்கி நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் 6-ல் 4 உறுப்பினர்கள் வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என்று வாக்களித்ததாலும் ரெப்போவில் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஆகியனவற்றையும் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக ஆக இருக்கும் என்றும், ஜிடிபி 7.2 சதவீதமாக ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பணப்பரிவர்த்தனை: வட்டி விகிதம் மாற்றம் இல்லை என அறிவித்த பிறகு யுபிஐ பணப்பரிவர்த்தனை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஆர்பிஐ கவர்னர். அதன்படி தற்போது வரி செலுத்துவதற்கான வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலமாக அதிக அளவில் வரி செலுத்துபவர்கள், தங்களின் வரியை எளிதாக யுபிஐ மூலம் செலுத்த முடியும். ஆனால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் இந்த வசதி இல்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ஷேக் ஹசீனா தான் பிரதமர்; அவாமி லீக் மீண்டும் ஆட்சி அமைக்கும்" - ஷேக் ஹாசீனாவின் மகன் பிரத்யேக பேட்டி