ஹைதரபாத்: பிரபல நெட்வொர்க் சேவை நிறுவனமான ஜியோ, சேவைக்கான கட்டணத்தை ஜூலை 3ஆம் தேதி அன்று முதல், 12-27 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜியோ தனது சேவைக் கட்டணத்தை உயர்த்தாத நிலையில் தற்போது உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், 15 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த ஆட்-ஆன் டேட்டா 19 ரூபாயாக உயர்த்தப்பட்ட உள்ளது. அதேபோல், 84 நாட்களுக்கான சேவைக் கட்டணம் 666 ரூபாயில் இருந்து 20 சதவீதம் உயர்த்தி 799 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. மேலும், 209 ரூபாய்க்கு 28 நாள் வேலிடிட்டியுடனா பேக்கின் கட்டணம் 249 ரூபாயாகவும், 239 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த பேக்கின் கட்டணம் 299 ரூபாயாகவும் உயர்த்தப்படவுள்ளது.
மேலும், 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் 479 ரூபாய்க்கான பேக், 100 ரூபாய் அதிகமாக 579 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. முழு ஆண்டிற்கான பேக்கேஜில் 1,559 ரூபாய்க்கு 24 ஜிபியுடன் 336 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்த பேக்கேஜ், ஆயிரதது 899 ரூபாய்க்கு வழங்கப்படப்போவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே, போஸ்ட்பெய்ட் சேவைக்கான கட்டணத்தையும் ஜியோ நிறுவனம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், 299 ரூபாய்க்கு இருந்த மாதச்சந்தா 349 ரூபாயாகவும் மற்றும் 399 ரூபாய்க்கு இருந்த மாதச்சந்தா 449 ரூபாயாகவும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, அளவில்லா 5G சேவைகள் அனைத்து 2.5 ஜிபி பேக்குகளுக்கும் (2.5GB/day), அதற்கு கூடுதலாக இருக்கும் பேக்குகளுக்கும் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அம்பானி கூறும் போது, "இந்த புதிய திட்டங்களின் அறிமுகம் 5G மற்றும் AI தொழில்நுட்பத்திற்கான வளர்ச்சிக்கான பாதையில் ஒரு படியாகும். மேலும், நாடு முழுவதும் சிறந்த மலிவு விலை இணைய சேவையை வழங்கி டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள ஜியோ, நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து முதலீடு செய்யும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்செக்ஸ், நிப்டி வரலாறு காணாத உச்சம்! அந்நியச் செலவாணி முதலீடு அதிகரித்தது மட்டும் காரணமா?