வாஷிங்டன் : உலக பணக்காரர்களின் தரவரிசை பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தை பிடித்து உள்ளார். எக்ஸ் மற்றும் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் 198 பில்லியன்ல் டாலருடன் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனார்.
கடந்த சில மாதங்களாக மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் 25 சதவீதம் வரை சரிந்ததால் ஏறத்தாழ 30 பில்லியன் டாலர் அளவுக்கு எலான் மஸ்க் நஷ்டத்திற்குள்ளானார். கடந்த ஜனவரி மாதம் டெஸ்லா நிறுவனத்தின் 55 புள்ளி 8 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பீட்டு ஒப்பந்தத்தை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்ததால் எலான் மஸ்க் நிதி நெருக்கடிக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் உலகின் பெரிய இகாமர்ஸ் தளமான அமேசானின் நிறுவனர் ஜெப் பெசாஸ், அண்மையில் தனது நிறுவனத்தின் 8 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தார். மேலும், பங்குசந்தையில் அமேசான் பங்குகள் விலை உயர்ந்ததால் இந்த திடீர் ஏற்றத்தை ஜெப் பெசாஸ் கண்டு உள்ளார்.
பிரான்சை சேர்ந்த LVMH குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 197 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 179 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 150 பில்லியன் அமெரிக்கா டாலருடன் உலக பணக்காரர்கள் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 4 பேர் தொழில்நுட்பத்தை தொழிலாக கொண்டு வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!