பதிண்டா : பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்து வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயி சுபாகரம் சிங் என்பவர் குண்டு காயம் பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியை நோக்கி செல்ல முயன்ற போது, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுபாகரம் சிங்கின் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிரிழந்த சுபாகரம் சிங் பஞ்சாப் - அரியானா எல்லையில் 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போது கொல்லப்பட்டதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். உயிரிழந்த சுபாகரம் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஏறத்தாழ 4 கட்டங்களாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போதும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முன்னதாக விவசாயிகள் போராட்டத்தில் மூத்த விவசாயி ஒருவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதி பங்கீடு இறுதி! எத்தனை இடங்களில் காங்கிரஸ் போட்டி தெரியுமா?