ஹைதராபாத்: நாடளுமன்ற தேர்தல் நெருங்கி வரக்கூடிய வேளையில் பொது சிவில் சட்டம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய பாஜக அரசு கருத்துக் கேட்டு வரும் நிலையில், உத்ராகண்ட் மாநில சட்டசபையில் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று (பிப்.06) தாக்கல் செய்து உள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதியாக பொது சிவில் சட்ட அமல்படுத்துவது இருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் மசோதாவைத் தற்போது தாக்கல் செய்து உள்ளது அம்மாநில அரசு.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன? இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனை சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் மதம் மற்றும் கலாச்சாரத்திற்கேற்ப மாறுபடும். இந்தியாவில் உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அவர்களின் மத நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் தனித்தனியான சட்டங்களை கையாண்டு வருகின்றனர்.
இவற்றை முழுவதுமாக ஒழித்துவிட்டு மத அடிப்படையில் அல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை உருவாக்குவது தான் Uniform Civil Code அல்லது Common Civil Code சட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்திய சட்ட ஆணையம்: கடந்த 2016ஆம் ஆண்டு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வழிமுறைகளைச் சட்ட ஆணையம் ஆராய மத்திய பாஜக அரசு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு 185 பக்க அறிக்கை ஒன்றைச் சட்ட ஆணையமானது மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
அதில் பொது சிவில் சட்டம் இந்த நேரத்தில் தேவையானதாக இல்லை, ஒரு மதத்தில் உள்ள பாரபட்சமான நடைமுறைகளை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் செய்யலாம் என்று பரிந்துரைத்தது. இந்த அறிக்கை சமர்ப்பித்து 5 வருடங்கள் முடிந்த நிலையில் அது காலாவதியாகிவிட்டது. இதன் காரணமாக, 22-வது சட்ட ஆணையம் மீண்டும் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைக் கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறது.
ஆதரவும்-எதிர்ப்பும்: போர்ச்சுக்கீசிய ஆட்சிக் காலத்தில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மசோதாவை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. அதேபோல் குஜராத் அரசும் பொது சிவில் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் உடைய நாடு என்றாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இங்கு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அது பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர் போன்றவர்களைப் பாதிக்கக் கூடும் என்பதால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்!