புதுடெல்லி: புதுடெல்லியில் இருந்த லண்டன் சென்ற விஸ்தாரா நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் பிராங்க்பர்ட் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
இந்தியாவில் இருந்து சென்ற 40 விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும் சோதனைக்குப் பின்னர் அவை உண்மையல்ல புரளி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதுடெல்லியில் இருந்து லண்டன் சென்ற விஸ்தாரா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துக்கு விமான நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்,"18ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து இது குறித்து தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானி விமானத்தை பிராங்க்பர்ட் நகரில் இறக்குவது என்று முடிவு செய்தார். எனவே, விமானம் பிராங்க்பர்ட் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு முகமைகள் உறுதி செய்த உடன் விமானம் லண்டன் கிளம்பும்,"என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அகாசா ஏர் நிறுவனத்தின் பெங்களூரு-மும்பை இடையிலான விமானத்துக்கு கிளம்பும் சற்று நேரத்துக்கு முன்னர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழிறக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் விமானம் கிளம்பி சென்றது.
இந்த நிலையில் விமானங்களுக்கு போலியாக மிரட்டல் விடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது என விமானப்போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இத்தகையை மிரட்டல் விடுப்பவர்களை விமானங்களில் செல்ல அனுமதி மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்