லக்னோ: மருத்துவர்களின் அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறிய உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், பணிக்கு வராத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, பல நாட்களாக பணிக்கு வராத 774 மருத்துவர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியுள்ளதாக உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இன்று (பிப்.05) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “2017ஆம் ஆண்டுக்கு முன் உ.பி.யில் இருந்த சுகாதார சேவைகளின் நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். மருத்துவர்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. மருத்துவ இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. ஆனால், தற்போதைய அரசாங்கம் எளிய மக்களுக்கு உலகத் தரமான சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும், எங்கள் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வருகிறது. 2017க்கு முன்பு, மாநிலத்தில் 17 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 65 மருத்துவக் கல்லூரிகள் முழுத் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், இந்தியாவின் தரக் கட்டுப்பாட்டால் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே மருத்துவர்களின் இந்த அலட்சியத்தை பொறுத்துக் கொள்ள முடியாது” என கூறியுள்ளார்.
இதற்கிடையில், மாநில பட்ஜெட் 10 சதவீத மக்களை மட்டுமே திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பதக், “சமாஜ்வாதி கட்சித் தலைவரின் மனநிலை கெட்டுவிட்டது, அவருக்கு எந்த நெறிமுறையும் கிடையாது. அதனால்தான் அனைத்து விஷயங்களிலும் குற்றம் காண்கிறார்'' என கூறினார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்.. 2 மணி வரை பேரவை ஒத்திவைப்பு!