டெல்லி: மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 2024ஆம் ஆண்டிற்கான ஹஜ் வழிகாட்டு நெறி முறைகளை வெளியிட்டுள்ளார். மேலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் நலனுக்காக 'ஹஜ் சுவிதா' செயலியை அறிமுகப்படுத்தினார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில்,"ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்க்கு சுமூகமான பயணத்தை மேற்கொள்ளுவதற்குத் மத்திய அரசு, பல்வேறு அமைச்சகங்கள் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஹாஜிகளுக்கான வசதிகள் மேம்படுத்துவது சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்பதனை உணர்த்தும் விதமாக மோடி அரசாங்கம், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உள்ளது.
இந்த வருடம் எல்டபிள்யூஎம்(Lady without Mehram) பிரிவின் கீழ் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு தனிப்பட்ட பெண் ஹாஜிகளின் எண்ணிக்கை 4,300 ஆக இருந்தது, இந்த ஆண்டு 5160-ஐ தாண்டியுள்ளது. யாத்ரீகர்களின் ஹஜ் அனுபவத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 'ஹஜ் சுவிதா' (Haj Suvidha) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யாத்ரீகர்களுக்கு ஏதேனும் உதவி தேவை ஏற்பட்டால், தங்கள் இருப்பிடத்தை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த இந்த செயலி உதவிக்கரமாக இருக்கும். மேலும் விமான விவரங்கள், தங்குமிடம், அவசரக்கால உதவி எண் ஆகியவைகளும் இந்த செயலில் இடம் பெற்றுள்ளன" என தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஜன.08ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற்ற 3வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். பின்னர் உம்ரா நலத்துறை மந்திரி தவ்பிக் பின் பஸ்வான் அல் ரபியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த அம்சங்கள் விவதிக்கபட்டது. இதனையடுத்து, 2024 ஆண்டிற்கான இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதன்படி இந்த ஆண்டு 1,75,025 யாத்ரீகர்கள் ஒதுக்கீட்டுடன் இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,"இந்தியாவில் இருந்து ஹஜ் 2024 ஆம் ஆண்டுக்கு மொத்தம் 1,75,025 யாத்ரீகர்களின் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,40,020 இருக்கைகள் ஹஜ் கமிட்டி மூலம் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 35,005 யாத்ரீகர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்." என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: மேனகா, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு சீட் மறுப்பா? உ.பியில் பாஜக திட்டம் என்ன?