மைசூரு: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் ஜேடிஎஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வென்ற எச்.டி.குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர் இன்று (ஜூலை 28) மைசூருவில் உள்ள நஞ்சன்கூடு ஸரீகண்டேஸ்வரா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
பின்னர், அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஒய்வு எடுப்பதற்காக அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்துள்ளார். அப்போது, விருந்தினர் மாளிகை பூட்டப்பட்டிருந்தது. பின்னர், அங்கு 10 நிமிடம் காத்திருந்தும் ஊழியர்கள் கதவை திறக்காததால், அமைச்சர் குமாரசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த விஷயம் செய்திகளில் வெளியானதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் குமாரசாமி, 'அதை விடுங்கள், அரசியலில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும். இதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை' என்று கூறிவிட்டார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சரும், ஜேடிஎஸ் கட்சி தலைவருமான சாரா மகேஷ், மத்திய அமைச்சரின் வருகை குறித்து கோயில் அதிகாரிகளுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும்கூட இப்படி அலட்சியம் காட்டியுள்ளனர்'' என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் பூதாகரமாகிய நிலையில் மைசூரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோயிலுக்குச் சென்ற மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி, நஞ்சன்கூடு அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சென்றபோது, விருந்தினர் மாளிகை பூட்டிக் கிடந்தது தெரிந்தது. இது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடமை தவறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதையும் படிங்க: நேதாஜியின் அஸ்தியை மீட்டுத் தர பிரதமருக்கு பேரன் கடிதம்!