புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ராஜேஷ் தன்வார், மனைவி கோமல், மகள் கவிதா மூவரும் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.
காலையில் ஜாக்கிங் சென்று வீட்டுக்கு வந்த மகன் அர்ஜுன் மூவரின் சடலத்தை கண்டு அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் டெல்லி போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீசார், இந்த கொலை சம்பவம் பணம், நகைக்காக நடந்தப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
ஒரு குடும்பத்தில் ஒருவரை தவிர, மற்ற மூன்று பேரும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. அந்த வகையில், கொலை செய்யப்பட்ட தம்பதியின் மகன் அர்ஜுனிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இக்கொலைக்கான மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.
கொலை பின்னணி
ராஜேஷ் தன்வார் ஒய்வு பெற்ற ராணுவ வீரர். பணி ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டி ஆபிஸராக வேலை பார்த்து வந்தார். ராணுவத்தில் பணியாற்றியதால் பிள்ளைகளையும் கண்டிப்புடன் வளர்த்து வந்துள்ளார். மகள் கவிதா கல்லூரி மாணவி. குத்துச்சண்டை வீரரான மகன் அர்ஜுன் படிப்பை விட விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால், ராஜேஷ் தன்வார் அவ்வப்போது மகனை கண்டித்துள்ளார். அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர்களுக்கு, அர்ஜுன் மூலமாக வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு அர்ஜுன் குறித்து வீட்டில் பெரிய பிரச்சினை வெடித்துள்ளது. அப்போது, மகன் கீழ்படியவில்லை என்று அர்ஜுனை ராஜேஷ் தன்வார் அடித்துள்ளார். மேலும், ராஜேஷ் தன்வார் தனது சொத்தை மகள் பெயருக்கு எழுதி வைக்கவும் விரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் தந்தை, தாய், சகோதரி மூவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனை பெற்றோரின் 27வது திருமண நாளில் நடத்தி முடிக்கவும் நினைத்திருந்தார்.
அதன்படி, டிசம்பர் 4ம் தேதி காலை 5 மணியளவில் தந்தையின் ராணுவ கத்தியை வைத்து ஹாலில் உறங்கிக்கொண்டிருந்த கவிதாவை படுக்கையிலேயே குத்தி கொன்றுள்ளார். அதன் பிறகு மாடியில் உறங்கிக்கொண்டிருந்த தந்தை ராஜேஷ் தன்வாரை அதே கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதை தடுக்க வந்த தாய் கோமலையும் சரமாரியாக குத்தியுள்ளார். பலமான கத்தி குத்தால் இருவருமே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரை விட்டுள்ளனர்.
அதன் பின்னர் எதுவுமே தெரியாமல் ஜாக்கிங் செல்வதாக வெளியே வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் அர்ஜுன் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் அவர் மீது மேற்கொண்ட நவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.