சென்னை: பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் ஆளுநருக்கு முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை ஆளுநர் ஆர்.ரவி நிராகரித்துள்ளார். சட்டப்படி அதனை நிராகரிப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எனவே பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் மேல்முறையீட்டில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது. அதேநேரம், பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்ச் 13 அன்று கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்.
ஆனால், அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை. சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது. மேலும், இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமையும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு திமுக எம்பி, எம்ஏல்ஏக்கள் உட்பட லரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.. அடுத்த திட்டம் என்ன?