திருப்பதி ( ஆந்திரா): திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் பிற மத குறியீடுகள் கொண்ட கீ செயின் மற்றும் பரிசு பொருட்கள் விற்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தலைவர் பி.ஆர்.நாயுடுவிடம் பக்தர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோயில் வளாகத்தில் உள்ள அந்த கடையில் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அப்போது பிற மத குறியீடு கொண்ட பொருட்கள் விற்கப்படுவதை கண்ட அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்து கடை உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய கண்காணிப்புத் துறை அதிகாரிகள், “ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது இங்கு உள்ள மத்திய வரவேற்பு அலுவலகத்திற்கு (CRO) எதிர்ப்புறம் உள்ள கடையில் காப்பு ஒன்றை வாங்கியுள்ளனர்.
காப்பை சரியாக பார்க்காத அவர்கள் வீடு திரும்பிய பின் அந்த காப்பை எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அந்த காப்பில் பிற மத குறியீடு பொறிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் இதுகுறித்து தேவஸ்தானத்திற்கு புகார் தெரிவித்த நிலையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், புகாரில் குறிப்பிட்டதை போல பிற மத குறியீடு கொண்ட பொருட்கள் அந்த கடையில் விற்கபட்டதை உறுதி செய்தோம். பின், கடை உரிமையாளர்கள் தேவஸ்தானத்திடம் அனுமதி பெற்று கடை வைத்துள்ளார்களா? என விசாரணை செய்தோம்.
அவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். எங்களிடம் இது குறித்து விளக்கமளித்த கடை உரிமையாளர் ‘பிற மத குறியீடு இது என எங்களுக்கு தெரியாது. எந்தவொரு உள்நோக்கத்துடனும் நாங்கள் இந்த பொருட்களை விற்கவில்லை. எங்களுக்கு இதுபோன்ற ஒரு விதிமுறை உள்ளது என தெரியாது. மதத்தை புண்படுத்தும் நோக்கம் ஒருபோதும் எங்களுக்கு இல்லை’ என விசாரணையில் கூறினர்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: சினிமாவை மிஞ்சும் திருட்டு; 108 ஆம்புலன்ஸுக்கு வந்த சோதனை! போலீஸ் வளைத்து பிடித்தது எப்படி?
இதுகுறித்து பேசிய கடையின் உரிமையாளர், “தற்போதுதான் கண்காணிப்புத் துறையினர் எங்களிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று கூறினார்கள். இதையடுத்து தேவஸ்தானத்தின் அனுமதி பெற்றபின் கடையை மீண்டும் திறக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.