டெல்லி: போதைப்பொருள் கட்டுபாட்டு பணியகத் தலைமையகம், டெல்லி காவல்துறையுடன் இணைந்து நடத்திய நடவடிக்கையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் வலையமைப்பை முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, "இந்த நடவடிக்கையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், டெல்லியில் 50 கிலோ சுடோபெட்ரின் என்ற ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மெத்தம்பேட்டமைன் போதை பொருட்களைத் தயாரிக்க இந்த ரசாயனம் பயன்படுகிறது எனவும், போதைப்பொருட்களை விமானம் மற்றும் கப்பல் வழியாக கொண்டு வருகின்றனர்.
இந்த ரசாயனத்தை அதிகளவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஹெல்த் மிக்ஸ் மற்றும் டெசிகேட்டட் தேங்காய் மூலம் விமானம் மற்றும் கப்பல் வழியாக கடத்தப்படுவதாக நியூசிலாந்து சுங்க அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சுடோபெட்ரின் என்ற ரசாயனத்தை காய்ந்த தேங்காய் பொடியில் மறைந்து வைத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அனுப்பியது தெரிய வந்தது.
இந்த ரசாயனம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் ரூ.1.5 கோடிக்கு விற்கப்படுகிறது என தெரிய வந்தது. இந்த ரசாயனம், டெல்லி விமான நிலையத்தில் இருந்து அனுப்பப்படுவதாக தகவல் வந்தது. எனவே, இந்த கும்பலைப் பிடிக்க டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுபாட்டு பணியகத் தலைமையகம் இணைந்து தனிப்படை ஒன்றை அமைத்து கடந்த 4 மாதங்களாக கண்காணித்தும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் வந்தது.
இந்நிலையில் டெல்லியில், பாசாய் தாராபூரில் உள்ள குடோனில் ஆய்வு செய்த போது 50 கிலோ சூடோபெட்ரின் மீட்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் இதுவரை 45 சரக்குகள் அனுப்பப்பட்டதாகவும், அதில் சுமார் 35,00 கிலோ சூடோபெட்ரின் ரசாயனம் இருந்ததாகவும், இதன் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் முக்கிய பங்காக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்றும், அவர் தற்போது தலைமறைவாகி விட்டார், எனவே அவரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உபி டிராக்டர் விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு! விபத்துக்கு இதுதான் காரணமா?