டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, பொன்முடி தரப்பிலான மேல்முறையீட்டில், அத்தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
அதேநேரம், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆளுநர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே பி பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஷ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஜி ஆர் வெங்கடரமணியிடம், நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப்பிரமாணம் செய்ய முடியாது என ஆளுநர் எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியது. மேலும், “ஆளுநரின் செயல்பாடு குறித்த்து நாங்கள் கவலை கொள்கிறோம். இதனை நாங்கள் நீதிமன்றத்தில் உரக்கச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஆளுநர் உச்ச நீதிமன்றத்தை மீறுகிறார்.
யார், ஆளுநருக்கு அறிவுரை வழங்கினார்களோ, அவர்கள் முறையாக அறிவுரைகளை வழங்கவில்லை. அதாவது, உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கும்போது, தண்டனையை நிறுத்தி வைத்தது என ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும். நாளைய தினம், உங்கள் நபரிடம் (ஆளுநர்) இருந்து எதையும் கேட்கவில்லை என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாங்கள் ஆளுநருக்கு உத்தரவிடுவோம். மேலும், இது தொடர்பாக 24 மணி நேரத்தில் ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: “பொன்முடி நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை” - பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு!