புதுடெல்லி: குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பார்ப்பது மற்றும் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 11-ம் தேதி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 28 வயது இளைஞருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அப்போது உயர்நீதிமன்றம், "தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் தீவிரமான பிரச்சினையில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களைத் தண்டிக்காமல், அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் அளவுக்கு சமூகம் முதிர்ச்சியடைய வேண்டும்" என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் இரண்டு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:156 படங்களில், 24 ஆயிரம் நடன அசைவுகள்; கின்னஸ் சாதனை படைத்தார் நடிகர் சிரஞ்சீவி!
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "சிறுவர் ஆபாசப் படங்களைப் பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வது போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றம்" என தெரிவித்தனர்.
ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 'குழந்தைகளுக்கான உரிமைகள் கூட்டணி' மற்றும் புதுடெல்லியைச் சேர்ந்த 'பச்பன் பச்சாவோ அந்தோலன்' ஆகிய அந்த இரண்டு தொண்டு நிறுவனங்கள் சார்பில் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா ஆஜராகி, உயர்நீதிமன்ற தீர்ப்பு இது தொடர்பான சட்டங்களுக்கு முரணானது என தெரிவித்ததை, உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டது.